பாலிவுட் திரையுலகில் நிலவும் அதிகார மாற்றம் மற்றும் மதம் சார்ந்த பாகுபாடுகள் குறித்து ஏ.ஆர்.ரகுமான் பேசியது கடந்த சில நாட்களாக இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் ரகுமானுக்கு எதிராகக் காட்டமான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது இதற்கு ஏ.ஆர்.ரகுமான் நேரடி விளக்கம் அளித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ரகுமான், “எனது நோக்கம் எப்போதும் இசை மூலம் இந்தியக் கலாச்சாரத்தை இணைப்பதும் கொண்டாடுவதுமே ஆகும்.
இந்தியா தான் எனது உத்வேகம் மற்றும் வீடு. சில நேரங்களில் நான் சொல்ல வந்த கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல;
எனது நேர்மையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியனாக இருப்பதையும், இங்குள்ள கருத்துச் சுதந்திரத்தையும் தான் மதிப்பதாகவும், தனது வாழ்க்கை எப்போதும் இசைக்காகவே அர்ப்பணிக்கப்படும் என்றும் கூறி “ஜெய் ஹிந்த்” எனத் தனது விளக்கத்தை முடித்துள்ளார்.
