ஒடிசா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்(79) சென்ற 2015ம் வருடம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் கோராபுட் தொகுதியில் இருந்து 9 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சுமார் 7 வருடங்கள் பாஜக உடன் இணைந்திருந்த கிரிதர், இப்போது பாஜகவிலிருந்து விலகி உள்ளார். கடந்த ஜன.25 ஆம் தேதி கிரிதர் கமாங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தன் ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள இயலாது என்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தனக்கு ஆதரவளித்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி” என்று பேசினார். அதேபோன்று கிரிதர் கமாங்கின் மகன் சிஷிர் கமாங்கும் பாஜகவில் இருந்து விலகினார்.

இவர்கள் இரண்டு பேரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதியில் சேர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் கேசிஆர் உடன் பலமுறை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி செய்தியாளர்கள் சிஷிர் கமாங்கிடம் கேட்டபோது, விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என கூறினார்.