நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில்,  அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும்,  என் பணிவான வணக்கங்கள் ”விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும்,  சமூக சேவைகளையும்,  நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் முழுமையான சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டுமே இயலாத காரியம்.  அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒரு புறம் என்றால்,  நம் மக்கள் சாதி மத மோதல்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும்,  முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலம் அற்ற வெளிப்படையான சாதி மத பேதமைற்ற  தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்சம் ஊழல் அற்ற  திறமையான நிர்வாகத்திற்கு வழிகாட்டக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக்    கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக அத்தகைய அரசியல்,  நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு,  தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து,  இந்த மண்ணுக்கேற்ற  ”பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும்” ( பிறப்பால் அனைவரும் சமம் )  என்கின்ற சமத்துவ   கொள்கை பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை  அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும்,  அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும் என தெரிவித்தார். நடிகர்விஜய் குறிப்பிட்டது திமுக மற்றும் பாஜக என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.