ஜனவரி மாதம் 2-ஆம் தேதி சிறுபடகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துள்ளது. இதைக் கண்ட பிரான்ஸ் கடலோர காவல்படையினர், அந்த படகு மாலை 5.30 மணிக்கு பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்ததை தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்தப் படகில் உள்ள என்ஜின் செயலிழந்து, படகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை தாங்கள் கண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் Rémi Vandeplanque என்னும் பிரான்ஸ் நாட்டு கடலோரக் காவல் படைவீரர், பிரித்தானியா பகுதியில் எல்லைபாதுகாப்பு படையினரும் மற்றும் கடலோர காவல்படையினரும் நிற்பதை பார்த்துள்ளார்.

உடனே ரேடியோ மூலம் அவர்களுக்கு, அந்த படகு பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த புலம் பெயர்ந்தோருக்கு உதவிசெய்ய பிரித்தானிய தரப்பிலிருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக  Rémi  கூறியுள்ளார். ஆனால் காற்றில் மீண்டும் அந்த படகு பிரான்ஸ் கடற்பகுதியை நோக்கி அடித்து வரப்பட்டது.

பிரித்தானிய பகுதிக்கு படகைச் செலுத்தமுயன்றும் படகிலிருந்தவர்களால் இயலவில்லை. அதற்குள் இரவு மணி 9.00 ஆனதால் படகிலிருந்த அனைவரும்  சோர்ந்து போனார்கள். மேலும் குளிரும், பயமும் அவர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து பிரான்ஸ் கடலோரக் காவல்படையினர் அந்த 38 புலம்பெயர்ந்தோரையும் மீட்டு அவர்களுக்கு போர்வை, உணவு மற்றும் சூடான பானங்களும் கொடுத்ததாக Rémi தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 38 பேரையும்  பிரித்தானிய கடலோரக் காவல்படையினர் கைவிட்டுவிட்டார்கள் என்று பிரான்ஸ் தரப்பில் அறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது.