சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ சமய அறிஞர்கள், அரசியல் கட்சியினர் என பலருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சைவ மாநாட்டில் கலந்து கொள்ள மதுரையிலிருந்து மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் காரில் நேற்று சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென மற்றொரு கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது.

ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை அடுத்து மதுரை ஆதீனம் ஹரிஹர சுவாமிகள் விபத்து ஏற்பட்ட அதே காரிலேயே மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் குறித்து தருமபுரம் ஆதீனம் கூறியதாவது, மதுரை ஆதீனத்தின் கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் கடவுளின் அருளால் மதுரை ஆதீனம் அந்த விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார். அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.