உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 91-ல் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) அதிகாலை 6 மணியளவில் நடந்த பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 மற்றும் 8 வயது குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். நானவ் பாலத்திற்கு அருகே, அலிகார் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், அதிவேகத்தில் வந்த கார் ஒரு மினி லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த மோதலில் எரிபொருள் தொட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீப்பற்றி இரு வாகனங்களையும் சில நொடிகளில் எரித்து சாம்பலாக்கியது. விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவில் தரிசனம் முடித்து திரும்பிய குடும்பத்தினரின் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்தன. உள்ளூர் மக்களால் மீட்கப்பட்ட ஐந்தாவது பயணி, அலிகார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆக்ராவிற்கு மாற்றப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், 30-40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். விபத்து காரணமாக ஆக்ரா-அலிகார் பாதையில் போக்குவரத்து தடைபட்டு, மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.

காவல்துறை இதை விபத்தாக பதிவு செய்து, வேகமாக வந்ததாலா?, ஓட்டுநரின் அலட்சியமா அல்லது வாகன கோளாறா என விசாரணை மேற்கொண்டு வருகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.