தை மாதம் என்றாலே பொங்கல் திருநாள் கொண்டாடப்படும். தைப்பொங்கலுக்கு முன் அனைவரும் போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி என்றாலே பழைய பொருட்களை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். இந்த ஆண்டு போகி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது, போகி பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்கள் ஆன பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், துணிகள், டயர் மற்றும் டியூப், காகிதம் போன்றவற்றை அதிகளவில் எரிப்பதால் காற்று மாசுபடுதல் ஏற்படுகிறது. இதனால் நம் பகுதியில் சுற்றியுள்ள வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரச்சாரத்தை தொடர்ந்து பெரும்பாலும் செயற்கை முறையிலான பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது. அதேபோன்று இந்த ஆண்டும் பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்ற தீங்கான பொருட்களை எரிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் போகிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.