
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார். அப்போது வங்கி லாக்கரிலிருந்து நகைகளை பாண்டியன் மீட்டு வந்த நிலையில் சுப நிகழ்ச்சியின் போது மனைவி அணிந்து கொண்டார்.
இந்நிலையில் பாண்டியன் அவசர வேலை காரணமாக திடீரென சென்னைக்கு கிளம்பி சென்று விட்டார். அப்போது வங்கிக்கு செல்ல நேரம் இல்லாததால் நகையை வீட்டிலிருந்த பீரோவில் வைத்துவிட்டு வீட்டின் சாவியை அக்காவின் கணவரான ராமகிருஷ்ணன் (41) என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். இதைத் தொடர்ந்து 6 மாதத்திற்கு பின் கூனியூருக்கு திரும்பிய பாண்டியன் தன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது நகைகளை காணவில்லை.
இது தொடர்பாக ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது, ராமகிருஷ்ணன் அந்த நகைகளை எடுத்து நான் அடகு வைத்து விட்டேன். சீக்கிரத்தில் திருப்பி தந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்று வரை ராமகிருஷ்ணன் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் கோபமடைந்த பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.