உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடந்த 3வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேச அணி.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3வது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தர்மசாலாவில் இன்று காலை 10:30 மணி முதல் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் துவக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். மேலும் இப்ராஹிம் சத்ரான் மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோர் தலா 22 ரன்கள் எடுத்தனர். மற்றபடி யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரன்கள் எடுக்க வில்லை. வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 157 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி வங்கதேச அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கிய தன்சித் ஹசன் 5 ரன்னிலும், லிட்டன் தாஸ் 13 ரன்னிலும் அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினர். இதையடுத்து 7வது ஓவரில் இருந்து மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடி 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பின் அரைசதமடித்த மெஹிதி ஹசன் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 14 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷாண்டோ இருவரும் சேர்ந்து அணியை வெற்றிபெற வைத்தனர். வங்கதேச அணி 34.4 ஓவரில் 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி அரைசதமடித்த ஷாண்டோ 59 ரன்களுடனும், முஷ்பிகுர் 2 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஆப்கான் அணியில் பரூக்கி, நவீன் உல் ஹக், ஒமர்சாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்..