தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது..

2023 உலக கோப்பையில் இன்று 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்களாக குயிண்டன் டீ காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினர். இதில் பவுமா 8 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் டிக் டாக் மற்றும் ரஸி வாண்டர்  டஸ்ஸன் இருவரும் ஜோடி சேர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவருமே இலங்கையின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் சதமடித்த டி காக் 84 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 100 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து எய்டன் மார்க்ரம் மற்றும் வாண்டர் டஸ்ஸன் இருவரும் சேர்ந்தனர். பின் வான்டர் டசனும் சதமடித்தார். ரஸி வாண்டர்  டஸ்ஸன் 110 பந்துகளில் (13 பவுண்டரி, 2 சிக்ஸர்) 108 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பின் ஹென்றிச் கிளாஸன் – மார்க்ரம் கைகோர்த்து ஆடிய நிலையில், கிளாஸன் 20 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனிடையே மார்க்ரம் தொடர்ந்து பவுண்டரிகளாக அடித்து மிரட்ட அணியின் ஸ்கோர் 300ஐ கடந்து சென்றது. பின் மார்க்ரமுடன் மில்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மார்க்ரம் அதிரடியாக விளையாடி தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 49 பந்துகளில் சதம் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் சாதனை நிகழ்த்தினார். இதுவரையில் உலக கோப்பையில் 2011 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

பின் கடைசியில் எய்டன் மார்க்ரம் 54 பந்துகளில் (14 பவுண்டரி, 3 சிக்ஸர்) 106 ரன்கள் எடுத்து 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசியில் டேவிட் மில்லர் – மார்கோ ஜான்சன் சேர்ந்து விளாச தென்னாபிரிக்க அணி 400 ரன்கள் கடந்தது. மில்லர் 21 பந்துகளில் 39 ரன்களும், மார்கோ ஜான்சன் 12 ரன்களில் களத்தில் இருந்தனர். இறுதியில் 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா தனது உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் 400 ரன்களைக் கடந்தது, உலகக் கோப்பைப் போட்டியில் அவர்கள் அவ்வாறு செய்வது இது 3வது முறையாகும். தென்னாப்பிரிக்கா 8வது முறையாக ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை கடந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. 48 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3பேர் (வான் டெர் டஸ்ஸன் 108(110), ஐடன் மார்க்ரம் 106(54), டி காக் 100(84)) சதமடித்தது இதுவே முதல்முறை. இதற்கு முன் இரு தரப்பு போட்டிகளில் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்படவில்லை..

அதேபோல தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்தது. இது 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச அணியின் மொத்த ஸ்கோர் ஆகும். தற்போது கடின இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது இலங்கை அணி..