இந்திய அணி பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. 

2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகினர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையின் 2வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இந்த போட்டியில் முகமது சிராஜின் 6 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியாவின் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ராவின் 1 விக்கெட் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை அணியும் சரிந்தது. முகமது சிராஜின் புயல் பந்துவீச்சைக் கண்டு உலகமே திகைத்தது. சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பின்னர் இலக்கை துரத்த இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். கிஷன் 18 பந்துகளில் 23 ரன்களுடனும், சுப்மான் கில் 19 பந்துகளில் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் சாம்பியன் பட்டம் வென்றதற்கு முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள்  உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், “இந்தியா நன்றாக விளையாடியது! ஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். எங்கள் வீரர்கள் போட்டி முழுவதும்  சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.” என்று தெரிவித்தார்..