
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், எத்தனை இடங்கள் பிடிப்பீர்கள் என்று முன்னாள் துணை முதல்வரும் ஜங்கபுரா தொகுதி வேட்பாளருமான மணீஷ் சிசோடியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் டெல்லியில் மிகப்பெரிய அளவிலான மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் ஆனால் எத்தனை இடங்களை பிடிக்கும் என்று தற்போது கூற முடியாது அது மிகவும் கடினம். மக்களிடம் இருக்கும் உற்சாகத்தை பார்க்கும் போது ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி பிடிக்கும் என்று நம்புகிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்ற சூழல் டெல்லியில் நிலவுகிறது. 8-வது ஊதியக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது தேர்தலுக்கு முந்தைய அறிவிப்பு என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.
பின்னர் இது தேர்தலுக்கான தந்திரம் அல்லது 5 ஆண்டுகளுக்குப் பிறகு இதை அமல்படுத்துவோம் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் என்று கூறினார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. 8 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.