மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குவைத் வான் எல்லைப் பகுதியில் அமெரிக்காவின் மூன்று ‘F-15’ போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்த ‘பிரண்ட்லி ஃபையர்’ (Friendly Fire) சம்பவத்தின் போது, அமெரிக்க விமானங்கள் மூன்றிலும் இருந்த மொத்தம் 6 வீரர்களும் அதிர்ஷ்டவசமாகப் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.

இதில் பாலைவனப் பகுதியில் வந்து விழுந்த அமெரிக்கப் பெண் பைலட் ஒருவரை, அங்கிருந்த குவைத் குடிமகன் ஒருவர் அணுகி உதவிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், காயமின்றித் தரை இறங்கிய பெண் பைலட்டிடம், “நீங்கள் நலமா? (Are you OK?)” என்று அக்கறையுடன் விசாரிக்கும் அந்த நபர், “எங்களுக்கு உதவி செய்தமைக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

ஈரான் மீதான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தாக்குதலில் இந்தப் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், குவைத் அரசு இச்சம்பவத்தை உறுதி செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.