உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருவதால், நகைக்கடைகளில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதனைத் தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் ‘முகத்தை மூடி வருபவர்களுக்கு அனுமதி இல்லை’ என்கிற முடிவை ஜான்சியின் சிப்ரி பஜார் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் உதய் சோனி கூறுகையில், “தங்கத்தின் விலை உயர்வால் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி வாடிக்கையாளர்கள் ஹெல்மெட், முகமூடி அல்லது துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு கடைக்குள் வரக்கூடாது எனத் தீர்மானித்துள்ளோம்.

கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களில் அனைவரது முகமும் தெளிவாகப் பதிவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அரசின் அறிவுறுத்தலின் படியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம், இதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். திருட்டு பயம் காரணமாக நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.