சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் ஸ்ரீவாரியார் நகரில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவரேகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இரண்டாவது மகள் மதனஸ்ரீ (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அவர் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
