விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும்.

அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என கூறுபவர் யார் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதை கூற வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணியில் இணைப்புதான் உள்ளதே தவிர எந்த வித பிணைப்பும் இருப்பதாக தெரியவில்லை என கூறினார்.

மேலும் ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என அன்புமணி கேட்டதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. நாங்கள் அந்த அடிப்படையில் எதையும் கூறவில்லை.

தந்தைக்கும், மகனுக்கும் இடைவெளி பெரிதாகி விட்டால் அந்த இடைவெளியை பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடுவர். ஏற்கனவே சனாதன சக்திகள் அதனை சாதகமாக்க முயற்சித்து வருகின்றனர்.

எனவே தந்தைக்கு இருக்கும் அனுபவத்தையும், ஆளுமையையும் அன்புமணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தையாகும் அவ்வளவுதான்.

ஏனெனில் பாமக எளிய மக்களுக்காக போராடுகிற கட்சி அவர்களுக்கு இடையே ஏற்படும் பிளவுகளால் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் கூறியதாகும் இவ்வாறு அவர் தெளிவு படுத்தினார்.