மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. தீவிரவாத, உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில் ஈடுபடுவோர் செயற்கைகோள் செல்போனை பயன்படுத்தும் நிலையில், அமெரிக்கர் மீது சந்தேகம் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை கைது செய்தனர். அதன்பின் உள்ளூர் காவல்துறையினர் அந்த அமெரிக்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் கைதானவர் தாமஸ் எஸ்ரோ சீட்ஸ் என அடையாளம் காணப்பட்டது. இதில் தாமஸ் அமெரிக்க விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அந்த அமெரிக்க நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து நம் ராணுவ வீரர்களுக்கு ட்ரோன் பயிற்சியளித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் தாமஸ் இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் பயிற்சி அளிக்க வந்தவரா (அ) உளவு வேலை பார்ப்பதற்காக செயற்கைகோள் செல்போனை கொண்டு வந்தாரா என விசாரித்து வருவதாகவும், சம்பவம் தொடர்பாக மற்றொருவரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.