இந்தியாவில் கடந்த 1973 -ம் ஆண்டிலிருந்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354(5) இன்‌ கீழ் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு திகார் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா என்பவர் தூக்கு தண்டனைக்கு பதிலாக வலி குறைந்த மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தூக்கு தண்டனைக்கு பதில் மின்சாரம் தாக்குதல், துப்பாக்கி சூடு அல்லது மரண ஊசி மூலம் கொல்லுதல் போன்ற வழிமுறைகள் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு குற்றவாளியை தூக்கிலிடும் போது அவன் கடுமையான வலியையும் சித்திரவதையும் அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே தூக்கு தண்டனைக்கு பதிலாக வலியில்லாத மாற்று மரண தண்டனையை கொண்டு வர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் தூக்கு பொருத்தமான தண்டனையா, இது வலியற்ற முறையா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதோடு ஆய்வு செய்யும் நிபுணர்களின் பட்டியலை தற்போது தயார் செய்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. அதன் பிறகு நீதிபதிகள் மத்திய அரசு இந்த ஆய்வை செய்யவில்லை எனில் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களான என்.எல்.யு அல்லது ஹைதராபாத், எய்ம்ஸ் மருத்துவர்கள், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்றவர்கள் மற்றும் சில அறிவியல் நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்கலாம் என பரிந்துரை செய்தனர். மேலும் அடுத்த கட்ட வழக்கு விசாரணையை ஜூன் இரண்டாம் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.