இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால் ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து விதமான செயல்பாடு களுக்கும்‌ அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் எண்களை பகிரும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் வரும் குறுந்தகல்களை நம்பி யாரும் ஆதார் எண்களை பகிர வேண்டாம் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய‌ மின்னணு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆதார் எண்களை கவனத்துடன் கையாள்வதோடு, சமூக ஊடகங்கள் மற்றும் பொது நிறுவனங்களிடம் ஆதார் எண்களை கொடுக்கும் போது அதற்கான உரிய விளக்கத்தை கேட்டறிய வேண்டும். அதன் பிறகு எந்த காரணத்தை கொண்டு ஆதார் மற்றும் ஓடிபி விவரங்களை யாருக்கும் பகிரக்கூடாது.

ஒருவேளை கட்டாயமாக ஆதார் அட்டை தேவைப்படும் இடத்தில் விர்ச்சுவல் ஆதார் அட்டையை கொடுத்தால் போதுமானது. அதோடு ஆதார் லாக்கிங் முறையை பயன்படுத்திக் கொண்டால் இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஆதார் எண்களை பெறும் நிறுவனம் அதை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் எனவும், அரசு அனுமதி கொடுத்துள்ள நடைமுறைகளுக்கு மட்டுமே ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.