இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் மேற்கூரை இருப்பது இடிந்து விழுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் எப்போதும் ஹெல்மெட் அணிந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். உயிரையும் பணயம்  வைத்து வேலை பார்க்கும் ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசத்தில் பாராவுத் நகரில் உள்ள மாநில மின் துறையின் கட்டிடம் பழுதடைந்துள்ளதால் பொறியாளர்கள், எழுத்தர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 40-திற்கும் மேற்பட்டோர் கட்டிடத்திற்குள் பணிபுரியும் போது ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உயிருக்கு ஆபத்து என்ற வகையில் தீவிரமான விஷயம் என்றாலும் அலுவலகத்திற்குள் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேடிக்கையாக பகிர்ந்து வரப்படுகின்றது.