தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அயனாவரம் பகுதியில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கூட்டத்திற்கு நடுவே திடீரென மதுப் பாட்டில் ஒன்று வீசப்பட்டது.
இந்த எதிர்பாராத தாக்குதலில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா குற்றவாளிகளைக் கண்டறியும் வரை தான் அந்த இடத்திலிருந்து நகரப் போவதில்லை என்று கூறி மேடையிலேயே தர்ணாவில் ஈடுபட்டதால் அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது. காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தித் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் வில்லிவாக்கம் தேர்தல் கூட்டத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
