ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கியில் வசித்து வந்தனர். சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பேரழிவை சந்தித்த துருக்கியில் இருந்து இவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு படகில் பயணித்துள்ளனர். இந்த படகு அந்நாட்டின் கலாப்ரியா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு அருகில் இருந்த பாறை மீது மோதியுள்ளது. இதனால் படகு உடைந்து நீருக்குள் மூழ்கியுள்ளது. மேலும் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களில் சிலர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணியில் 30 பேர் பிணமாகவும் பலர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விபத்து நடந்த கடல் பகுதியில் மேலும் 31 பேரின் உடல்கள் மீட்க ப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.