விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழ் நடிகரும் அரசியல் தலைவராக முயற்சி மேற்கொண்டு வரும் விஜய் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய் பேசியதைக் குறிப்பிட்ட அவர், “அது வெறும் விளையாட்டு தனமான பேச்சு. அதில் அரசியல் நுணுக்கம் எதுவும் இல்லை. யாரோ எழுதி கொடுத்ததை வாசித்து நடித்துவிட்டு போயிருக்கிறார்,” என்றார்.

மேலும், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் திருவிழா போல வரவேற்கப்படுகிறார். அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைகடலாக வந்து குவிகின்றனர். ஆனால் விஜய் பேசும் முன்பே மக்கள் தவெக் மாநாட்டில் இருந்து வெளியேற தொடங்கினர். இது அவரது உண்மையான வரவேற்பு எவ்வளவு என சொல்லும்,” எனத் தெரிவித்தார்.

அதிமுகவின் 54 ஆண்டு அரசியல் அனுபவத்தைக் குறைத்து பேசும் விஜய், தனது அரசியல் பயணத்துக்கே கோடு போட்டுவிட்டார் என்றும், இப்படியே தொடர்ந்தால் அவரை மக்கள் புறக்கணிக்க வாய்ப்பு அதிகம் என ராஜேந்திர பாலாஜி எச்சரித்தார். 2026 தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், பாஜகவும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.