தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவன் கஞ்சா விற்பனை குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதோடு, புகார் கொடுப்பவர்களின் விவரங்களையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 2 மணி நேரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட இளங்கோவன் என்பவர் ஏற்கனவே சஞ்சய் என்பவருடன் விரோதத்தில் இருந்துள்ளார். போதை பொருள் புகார் தொடர்பாக கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வரவில்லை. மேலும் தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.