திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சேரன்மகாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை குழுவை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நியமித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளார். அவரின் மீதான விசாரணையின் முழு அறிக்கை வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீஸ் ஸ்டேஷன்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் காவல்துறை தரப்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.