பழங்குடியின மக்கள் தங்களது பெருமை தினமாக கொண்டாடக்கூடிய பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிர்சா முண்டா பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர். மேலும் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இவரது பிறந்த நாளை மத்திய அரசு பீகார் மாநிலத்தில் ஜமுய் நகரில் கொண்டாட முடிவு செய்திருந்தது. அதன்படி அங்கு சிறப்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமரை பழங்குடியின மக்கள் மேளதாளத்துடன் சிறப்பாக வரவேற்றனர். அவர்களின் மேளதாளங்கள் வாசிப்பை கண்டு மெய் மறந்த பிரதமர் தானும் அதனை வாங்கி இசைத்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய பல பொருட்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. இதனை ஆர்வமாக பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதி தர்மதுரை, எழிலரசி கடை ஒன்றை அமைத்து இருந்தனர்.

இதனை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி இடம் அதில் உள்ள பொருள்களைப் பற்றி விளக்கி கூறிக் கொண்டிருந்தனர். பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் இருவரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்தனர். அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் செல்பி ஒன்றை எடுத்துக் கொண்டார். இந்த செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.