ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அண்மையில் நடந்த வான்வழி தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று தலிபான் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. இதனைக் தொடர்ந்து, பதிலடியாக நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை பகுதி முழுவதும் தலிபான் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலின்போது இரு தரப்பு படைகளுக்கும் இடையே கடும் சண்டை வெடித்தது. பீரங்கிகள் மற்றும் வான்வழி ஆயுதங்கள் வரை பயன்படுத்தப்பட்டதால், பரபரப்பான சூழல் நிலவியது. இது தொடர்பாக தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களை கொல்லப்பட்டனர்.

மேலும் 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்களை கைப்பற்றியுள்ளோம். கூடுதலாக 30 வீரர்கள் காயமடைந்துள்ளனர்,” என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால், மேலும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தலிபானின் இந்த அறிக்கையை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால், குனார், ஹெல்மண்ட் மற்றும் டூரண்ட் கோடு போன்ற எல்லைப் பகுதிகளில் மோதல்கள் நடந்தது உண்மை என்றும், தாக்குதலின் போது உயர் தரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், உயிரிழப்புகள் குறித்த பாகிஸ்தானின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலானது தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வருகை தந்துள்ள நேரத்தில் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளும் இடையிலான எல்லை கோளாறுகள் மீண்டும் தீவிரமடையும் சூழ்நிலையை இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது.