சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). இவர் பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24) என்ற மகள் மற்றும் ஜேக்கப் (22) என்ற மகனும் உள்ளனர். இவரது மனைவி  கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பதவியில் உள்ளார். கடந்த 24-ஆம் தேதி வீட்டில் கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகனும் தனியாக இருந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் வீட்டிற்குள் புகுந்து  சிறிய ரக கைதுப்பாக்கி மற்றும் கத்தி முனையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த காரில் அவர்களை கடத்தி சென்றனர்.

மேலும் ரோஜாவிடம் இருந்து 9 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளனர். இதனையடுத்து அந்த கார் தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியை கடந்து சென்ற நிலையில், அன்றைய தினமே இரவு 10 மணிக்கு பெண் கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் இருவரும் தங்களது காரிலேயே பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் காரை ஓட்டிச் சென்ற கடத்தல் கும்பலை சேர்ந்த டிரைவர் பரிதாபப்பட்டு அவர்களை  தப்ப விட்டதாக போலீசாரிடம்  கூறியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியான பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (26) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

சுரேந்தருக்கு பல்லவாடா கிராமத்தில் ஏற்கனவே இருந்த சுமார் 3 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு ரோஜாவின் கணவர் ரமேஷ்குமார் வாங்கியுள்ளார். ஆனால்  அதற்குரிய பணத்தை முறையாக தரவில்லை என கூறப்படுகிறது. மேலும், ரமேஷ்குமார், சுரேந்தருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் விவசாய நிலத்தையும் குறைந்த விலைக்கு தரும்படி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அதற்கு சுரேந்தர் மறுப்பு தெரிவித்ததால், அந்த விவசாய நிலத்தினை வேறு யாருக்காவது விற்கவும்   விடாமல் ரமேஷ்குமார், பல்வேறு தடைகளை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், ரமேஷ் குமாரின் குடும்பத்தினரை கடத்தி அவரை மிரட்டுவதற்காக இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேந்தருடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய அவரது நண்பர்கள் 4 பேரையும் சேர்த்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கை துப்பாக்கி போன்ற பயங்கரமான ஆயுதங்களையும்  பறிமுதல் செய்தனர்.