
குஜராத்தின் பாரூச் பகுதியில் சக நண்பனை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர், தனது நண்பர் சச்சினை கொலை செய்ததாக குஜராத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
மார்ச் 29ஆம் தேதி பாரூச் பகுதியில் உள்ள ஓடையொன்றில் ஒரு வெட்டப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களில் பல்வேறு பகுதிகளில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பகுதியில் உள்ள டாட்டூ அடையாளத்தின் மூலம், அந்த உடல் சச்சின் சௌஹான் என்பவரின் உடல் என்று போலீசார் உறுதி செய்தனர்.
சச்சின், உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர். அவரது நண்பர் ஷைலேந்திராவும் அதே ஊரைச் சேர்ந்தவர் தான். ஆனால் அவர் பாரூச் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இருவரது குடும்பத்தினரும் பிஜ்னோருக்கு புறப்பட்டிருந்த நிலையில், இருவரும் பாரூச்சில் தனியாக இருந்தனர்.
மார்ச் 28ஆம் தேதி சச்சின் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையின் போது, சச்சின் கடைசியாக ஷைலேந்திராவுடன் இருந்ததாக தகவல் கிடைத்தது.
மேலும் விசாரணையில், சச்சினின் மொபைலை வைத்து ஷைலேந்திரா பிஜ்னோர் மற்றும் டெல்லிக்கு பயணம் செய்து, அங்கு இருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியதும், சச்சினின் ஏடிஎம் கார்டை அதன் பின் நம்பருடன் ரயிலில் போட்டுவிட்டு, வேறு யாராவது பயன்படுத்தி தவறான தடங்கள் ஏற்படுத்துவார்கள் என எண்ணியதும் தெரியவந்தது.
அவரது தடங்களை மறைக்க, பெண் வேடமணிந்து உடல் பாகங்களை வாகனத்தில் எடுத்துச் சென்று வீசியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக கைது செய்யப்பட்ட ஷைலேந்திரா, தனது மனைவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து பணம் கேட்டு பிளாக்மெயில் செய்ததற்காகவே சச்சினை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.