சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர் அலுவலகம் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தை தாண்டி  சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.

ஆனால் அந்த சரக்கு வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி  கீழே விழுந்தார். அந்த பெண்ணுக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அங்கிருந்த காவல்துறையினர் பார்த்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் நிற்காமல் சென்ற தகவலை அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டபோது விபத்தில் உயிரிழந்த பெண் 42 வயதான ஸ்ரீதேவி, புதுப்பேட்டை சேஷாத்ரி தெருவில் வசித்து வந்தார் என்றும், தற்போது புரசைவாக்கம் பகுதிக்கு சென்று விட்டு புதுப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பும்போது விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சரக்கு வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சோதனை நடத்திய போது சரக்கு வாகனத்தை கண்டுபிடித்தனர். மேலும் சரக்கு வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.