இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் திஸ்ஸா துணைப் பிரிவின் சான்வாஸ் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெரும் சாலை விபத்து ஏற்பட்டது. சுமார் 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் கிடைத்தவுடன், சம்பா எஸ்பி அபிஷேக் யாதவ் தலைமையில் போலீசார், உள்ளூர்வாசிகள் மற்றும் ஊர்க்காவல் படையினரின் உதவியுடன் உடல்களை மீட்டனர். அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

 

இந்த சம்பவத்துக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “சம்பா மாவட்டம் திஸ்ஸா சான்வாஸில் நடந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையும் துயரமும் அளிக்கிறது. துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று X-இல் பதிவு செய்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

கடந்த புதன்கிழமையும் சிம்லா மாவட்டத்தில் நடந்த மற்றொரு கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். அந்தச் சம்பவத்திற்கும் முதல்வர் இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சாலை விபத்துகள் மாநில மக்களிடையே பெரும் கவலைக்குரியதாக உள்ளது.