கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டிவனம் சென்றிருந்தார். அங்கு, ஜீவாவின் வீட்டில் தங்கியிருந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை, பச்சையம்மாள், பாலமுருகனின் உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் கடலூருக்கு வந்துகொண்டிருக்கிறேன்… என் பெண் குழந்தை இறந்துவிட்டாள்” என கூறியுள்ளார். இதைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, கடலூர் பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்தனர். ஆனால், பச்சையம்மாள்  வரவில்லை.

அதன்பின் உறவினர்கள் பல இடங்களில் தேடியபோது, கடலூரில் உள்ள உழவர் சந்தை அருகே, 3 வயது இறந்த குழந்தையை தோளில் சுமந்தபடி பச்சையம்மாளும் மற்ற இரு குழந்தைகளும் நடந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்ததையும், பொதுமக்கள் கவனித்துள்ளனர்.

உடனே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது அந்த 3 வயது சிறுமி கொடூர கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாயுடன் தகாத உறவில் இருந்த ஜீவா குழந்தையை கொன்று இருப்பது தெரிய வந்தது. இவர் தினமும் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.