பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், தனியார் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேரியனில் இருந்து தல்வாரா நோக்கி சென்ற பேருந்தில், ஆகஸ்ட் 6, 2025 புதன்கிழமை மாலை சுமார் 6 மணியளவில், என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. அச்சமடைந்த பயணிகள், பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே குதித்து உயிர் தப்பினர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

வீடியோவில், பெண்கள் உள்பட பலர் ஓடும் பேருந்திலிருந்து குதித்து தரையில் விழுவது, பின்னர் பேருந்து நின்றதும் மக்கள் அவசரமாக வெளியேறுவது போன்ற காட்சிகள் தெளிவாகக் காணப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக, தீ பேருந்தின் உள்ளே மேலும் பரவாமல், வயரிங் பகுதிக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. சம்பவ தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவத்துக்கான காரணத்தை அறிய உள்ளூர் நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆரம்பக்கட்ட ஆய்வில், என்ஜின் வயரிங் கோளாறே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. “ஏதேனும் அலட்சியம் உறுதியானால், பொறுப்புக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.