லியோ படத்திற்கான சர்ச்சைகள் தினம் தோறும் வந்த வண்ணமே இருக்கிறது. படம் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையிலும் இன்னமும் படத்தை வாங்காமல் சில திரையரங்குகள் தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதாகவும் தயாரிப்பாளர் உடன் மோதல் போக்கு நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

9 மாவட்டங்களாக பிரித்து இந்த லியோ படத்தை விற்பனை செய்திருக்கிறார்கள்.  சென்னை, செங்கல்பட்டு , சேலம்,  சவுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு,  நெல்லை,  கோவை லியோ படத்தை விற்பனை செய்திருக்கிறார்கள். பெரும்பாலான ஊர் புறங்களில் இருக்கக்கூடிய திரையரங்குகள் இதை ஒப்புக்கொண்டு,  இதற்கான ஒப்பந்தமும் கையெழுதாகி  இருக்கிறது.

லியோ திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு  திரையிடுவதற்காக 80;20 என்ற சதவீதம் என்ற அடிப்படையில் (  திரையரங்க உரிமையாளர்களுக்கு 20% ,  80 % தயாரிப்பாளருக்கு  )  ஒப்பந்தம் செய்வதற்கு ஆரம்பத்தில் படத்தின் தயாரிப்பாளர் லலித் முடிவு செய்து,  இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்திருக்கிறது.

ஆனால் இதை சில திரையரங்க உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டாலும்,  பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து,  அடுத்த கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றிருக்கிறது. அதில் 70 : 30 என்ற சதவீதத்தில் ( 70 சதவீத வருவாய் தயாரிப்பாளருக்கும்,  30 சதவீத வருவாய் திரையரங்க உரிமையாளருக்கு )  பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதியில் இருக்கக்கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்,  அதேபோல தனியார் திரையரங்குகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு,  60:40 என்ற வீதத்தில் தான் எங்களுக்கு படத்தை தர வேண்டும். 60% வருவாய் தயாரிப்பாளருக்கும்,  40% வருவாய்  படத்தை வெளியிடக்கூடிய திரையரங்க உரிமையாளருக்கும் என பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.

ஆனால் அதற்கு படத்தினுடைய தயாரிப்பாளரும்,  விநியோகஸ்தருமான லலித்குமார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதன் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் உங்களுடைய படம் எங்களுக்கு தேவையில்லை . உங்களுடைய படத்தை திரையிட போவதில்லை என  திட்டவட்டமாக  தெரிவித்து,  ஏஜிஎஸ் நிறுவனம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக படத்தை நாங்கள் இதுவரை வாங்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல கோயம்பேட்டில் இருக்கக்கூடிய பிரபல ரோகிணி திரையரங்கமும் நாங்கள் இன்னமும் படத்தை வாங்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை,  செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய முக்கிய திரையரங்குகளில் இதே நிலை நீடிப்பதாக சொல்லப்படுகிறது. படம் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருவதற்கு முன்பாகவே இந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் இன்று மாலைக்குள் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை ஆனது நடைபெற்றிருக்கிறது.

ஒருவேளை 60: 40 சதவீதத்திற்கு தற்போது இவர்கள் ஒப்புக்கொண்டால்,  ஏற்கனவே 80; 20 சதவீதத்திற்கு ஒப்புக்கொண்ட பல திரையரங்க உரிமையாளர்கல் போர்க்கொடி தூக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். எங்களிடம் மட்டும் உங்களுக்கு 80 சதவீதம்,  எங்களுக்கு 20% என குறைந்த லாபத்தில் ஏன் நாங்கள் படத்தை  வெளியிட வேண்டும் என அவர்களும் போர்க்கொடி தூங்குவதாக  தகவல் கிடைத்திருக்கிறது.