
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலணியில் பெருமாள், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை பெருமாள் பூஜையுடன் காளி பூஜை திருவிழா தொடங்குகிறது. நாளை பால்குடம் எடுத்தல், பறவை காவடி, மாவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு பெரியவர்கள், சிறியவர்கள் என ஏராளமானோர் நேற்று காளியம்மன் கோவில் அருகே குளிர்பானங்களை வாங்கி சென்றனர். பின்னர் அம்மனை வழிபட்டு அந்த குளிர்பானங்களை தரையில் ஊற்றி நிவர்த்தி செய்யும் சம்பவம் வினோதமாக நடைபெற்றது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, கடந்த ஒரு வருடத்தில் தெரிந்தோ, தெரியாமலோ எங்களுக்குள் ஏதேனும் காரணங்களால் முன் விரோதத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்திருக்கும். அப்போது கடவுளே நீ இருந்தால் கேள் என கோபத்தில் முறையிட்டு கூறி விடுவோம்.
ஆனால் குலதெய்வத்தை பூஜை செய்து வழிபடும் போது எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து காளி பூஜை செய்து ஒற்றுமையாக சாப்பிட வேண்டும். இதனால் காளியை வழிபட்டு குளிர்பானத்தை தரையில் ஊற்றினால் ஒரு வருடத்தில் நடந்த அத்தனை பிரச்சனைகளும் காணாமல் போகும். பூஜை நிம்மதியாக செய்யலாம் என கூறினர்.