கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான காரணத்தை கூறி 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று 6 மாதத்திற்குள் வேலை கிடைக்கும் என்று நிரஞ்சனா கூறியுள்ளார்.

6 மாதத்திற்குள் வேலை கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் நிரஞ்சனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு அரசியல்வாதிகளை தெரியும். என்னை மிரட்டி பார்த்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார். சுமார் 9 பேர் 27 லட்ச ரூபாய் வரை நிரஞ்சனாவிடம் கொடுத்து ஏமாந்துள்ள நிலையில் அவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதோடு நிரஞ்சனாவையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் நிரஞ்சனா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.