மராட்டிய மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த தேவேந்திர பாட்னாவிஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து வாட்ஸ்அப்புக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதைதொடர்ந்து முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து தேவேந்திர பாட்னாவிஸுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்ட எண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் மாலிக் ஷாபாஸ் ஹுமாயுன் ராஜ தேவ் என்பவர் தான் இந்த மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடந்த வாரம் மர்ம நபர் ஒருவரிடம் இருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அவரது காரில் வெடிகுண்டு வைக்க இருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தது. இந்த கொலை மிரட்டல் காவல் நிலையங்களுக்கும், தலைமைச் செயலகத்திற்கும் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.