கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மணமகன், மணமகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் போது விருந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது விருந்து முடியும் தருவாயில் மணமகளின் குடும்பத்தினர் சாப்பிடும் சமயத்தில் கேட்டரிங் ஊழியர்கள் சரியாக தண்ணீர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மணமகள் வீட்டார் தகராறில் ஈடுபட்ட நிலையில் விடிய விடிய இந்த சண்டை நடந்தது. பின்னர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பலனளிக்கவில்லை. இக்கட்டத்தில் இது தொடர்பாக மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையே தகராறு ஏற்பட அவர்கள் கோபத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டனர். மேலும் உறவினர்கள் திருமணத்தை மீண்டும் நடத்த முயற்சி செய்தபோதும் அது பலனளிக்கவில்லை. குடிநீருக்காக ஒரு திருமணமே நின்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .