
டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இயக்குனராக தல்ஜித் சிங் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். சாதாரண வாழ்த்துக்கள் மூலம் ஆரம்பமான இவர்களது இணையப் பயணம் அடுத்தடுத்த உரையாடல்களால் காதலாக மாறியது.
தல்ஜித்தின் நம்பிக்கையை பெற்ற அனிதா, அதன் பிறகு தன்னுடைய நாடகத் திட்டங்களை அரங்கேற்றினார். அதாவது எதிர்கால வாழ்க்கைக்கு வர்த்தக மூலம் பெரும் லாபம் ஈட்டுவது தொடர்பாக தல்ஜித் சிங்கிடம், மூன்று நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு அதில் முதலீடு செய்ய வலியுறுத்தியுள்ளார்.
இதை நம்பிய தல்ஜித் சிங், அனிதாவின் பேச்சை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்தார். அதன் பெயரில் முதல் கட்டமாக ரூ.2.5 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் சில மணி நேரத்திலேயே 24 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார். அந்த தொகையில் ரூபாய் 8000-த்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியதை தொடர்ந்து அனிதா சொல்வது அனைத்தும் உண்மை என்று நம்பினார். இதையடுத்து அனிதா சொல்வதைக் கேட்ட தல்ஜித் சிங் தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் 4.5 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
அதோடு அனிதாவின் ஆலோசனையின் பேரில் கடனாக ரூ.2 கோடி பெற்று அதை முதலீடு செய்துள்ளார். இப்படி அவர் 30 வெவ்வேறு பரிவர்த்தனை மூலம் மொத்தம் ரூ.6.5 கோடியை 25 வங்கிகளுக்கு மாற்றியுள்ளார். இறுதியில் அந்த பணத்தை எடுக்க முயன்ற தல்ஜித்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதே போன்று 30 சதவீத பணத்தை மாற்றும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை செய்ய தல்ஜிப் மறுத்ததால் அவர் பண முதலீடு செய்த 2 நிறுவனங்கள் செயல் இழந்தன. இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் அனிதாவின் டேட்டிங் செயலி சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் பணம் மாற்றப்பட்ட கணக்குகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.