பீகாரின் மதுபானி மாவட்டத்தில் ஒரு அசாதாரண சம்பவம் நடந்துள்ளது. தனது விதவை அண்ணியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்காக சிறை ஒரு திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. சிறை அதிகாரிகள் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தனர், சிறை ஊழியர்கள் சாட்சிகளாகவும், மற்ற கைதிகள் மணமகனின் விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். மணமகன் பத்ரி யாதவ் மற்றும் மணமகள் கீதா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கீதாவின் கணவர் 2022இல் இறந்த பிறகு, அவருக்கும் பத்ரிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். ஆனால், ஒரு மனக்கசப்பு காரணமாக, கீதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் உள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் பத்ரி மீது புகார் அளித்தார், இதனால் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
பத்ரி, கீதாவை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவர் பலமுறை கர்ப்பமானபோது மருந்து உட்கொண்டு கர்ப்பத்தை கலைத்ததாகவும், மற்றொரு கர்ப்பத்தை கலைக்க மறுத்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
பத்ரி ஜாமீன் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், ஆனால் திருமணம் நடந்த பிறகே ஜாமீன் வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறையில் இந்த திருமணம் நடைபெற்றது.
