இந்தியாவில் எந்த ஒரு பெட்டிக்கடைக்குச் சென்றாலும் கோகோ கோலா, பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் தான் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த பிம்பத்தை உடைத்து எறிந்துவிட்டு, இந்தியர்களின் பாரம்பரியச் சுவையான ஜீரகத்தை வைத்து ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர் மூன்று பஞ்சாப் சகோதரர்கள்.
சௌரவ் முன்ஜால், சௌரவ் பூத்னா மற்றும் நிகில் தோடா ஆகிய மூவர் இணைந்து 2017-ல் தொடங்கிய ‘லாகோரி ஜிரா’ என்ற பிராண்ட் இன்று இந்திய சந்தையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. சிறுவயதில் நாம் தெருவோரம் குடித்த கோலி சோடா, எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஜீரகப் பொடி கலந்த அந்தச் சுவையையே இவர்கள் பாட்டிலில் அடைத்து விற்கத் தொடங்கினர்.
வெறும் 10 ரூபாய் என்ற மலிவான விலையில் 160 மிலி பாட்டில்களை அறிமுகப்படுத்தியது இவர்களின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. 2024-ல் 312 கோடியாக இருந்த இவர்களின் வருமானம், 2026 நிதியாண்டின் இறுதியில் சுமார் 775 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 2,800 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
ஆரம்பத்தில் வெறும் 20 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று 1,800-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. லாகோரி ஜிரா மட்டுமல்லாமல் ஷிகஞ்சி, இம்லி பன்டா, கச்சா ஆம் போன்ற பாரம்பரியச் சுவைகளையும் இவர்கள் வழங்கி வருகின்றனர்.
விளம்பரங்களுக்குப் பணம் செலவழிப்பதை விட, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டு சேர்ப்பதிலேயே இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். வெளிநாட்டு பானங்களுக்கு மாற்றாக இந்தியர்களின் மனதையும், நாவையும் கவர்ந்துள்ள இந்த பிராண்டின் வளர்ச்சி பல இளம் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
