ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேமியன் மார்டின் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கோமா நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 54 வயதான அவர் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான பாக்சிங் டே அன்று திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் அழற்சியான மெனின்ஜைடிஸ் எனும் தீவிர பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
டேமியன் மார்டினின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மருத்துவர்கள் அவருக்கு செயற்கை முறையில் கோமா நிலையை ஏற்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 1992 முதல் 2006 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மார்டின், 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர்.
அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் டேரன் லீமன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை பகிர்ந்து வருகின்றனர்.
