
பிரபல தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ, கடந்த 2022ம் ஆண்டு சமூக ஊடகமான ட்விட்டர் செயலியை வாங்கப் போவதாக ஏப்ரல் 4ம் தேதி அறிவித்தார். இதையடுத்து அந்த செயலியின் பங்கு மதிப்பு 27 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே டிவிட்டரின் 5 சதவிகித பங்குகளை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். அமெரிக்கா சட்டத்தின்படி ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கினாலோ, வைத்திருந்தாலோ அதனை 10 நாட்களுக்குள் சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும். ஆனால் எலான் மஸ்க் 11 நாட்களுக்குப் பிறகுதான் அதை அறிவித்தார்.
இந்த தாமதத்தின் காரணமாக 150 மில்லியன் டாலர் குறைவாக செலுத்தி, குறைந்த விலையில் ட்விட்டர் செயலியை வாங்கினார். இருப்பினும் ட்விட்டர் பங்குகளை வைத்திருந்த மற்றவர்கள் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து எலான் மஸ்கின் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்படி எலான் மஸ்க் பெற்ற தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்றும், கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் இந்த வழக்கில் அவர் அபராதம் மட்டுமே செலுத்துவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இந்தத் தொகையில் பெரும் பகுதி அவர் தலைமையிலான மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி அளிக்கப்பட்டது. இவர் மொத்தம் 12 பில்லியன் டாலர்கள் கடன்களையும் பெற்றார். இவர் ட்விட்டர் செயலியை வாங்கிய பிறகு எக்ஸ் என்று பேரை மாற்றி அமைத்தார்.