இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கச்வளைகுடாவில் மெரைன் நேஷனல் பார்கில் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவில் முதன் முதலில் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் 1982 இல் நிறுவப்பட்டது. பவள பாறைகள், சதுப்பு நிலங்கள், தனித்துவமான நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் அழகான பல்வேறு வகையான பறவைகளை இங்கு காண முடியும். குஜராத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான இந்த பைரோடன் தீவில் அங்கிருக்கும் கலங்கரை விளக்கத்தில் பணிபுரிபவர்களை தவிர மக்கள் எவரும் வசிப்பதில்லை.

எனவே தனிமை விரும்பிகளான அமைதியான இடமாக இது இருக்கின்றது. மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க நீங்கள் இந்த பைரோடன் தீவிற்கு வருகை தரலாம். இங்கிருக்கும் தனித்துவமான தேசிய பூங்கா சுற்றுலா பயணிகளை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இங்கே பல்வேறு வகையான பறவைகளை காணலாம். வண்ண மயமான பவளப்பாறைகளும் சதுப்பு நிலங்களும் நிறைந்த இந்த தீவில் ஜெல்லி மீன், அக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை, நத்தைகள், பச்சை கடல் ஆமைகள், டால்பின்கள் போன்ற அழகான நீர் வாழ் உயிரினங்களை இங்கே கண்டு களிக்கலாம்.

ஜாம்நகர் ரயில் நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. பைரோடனுக்கு வருவதற்கு முன் வனத்துறை, சுங்கத்துறை மற்றும் துறைமுகங்களில் அனுமதியை பெற வேண்டிய கடுமையான அதிகாரப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளிநாட்டவர் என்றால் காவல்துறையின் கூடுதல் அனுமதி தேவை. ஆண்டின் எந்த நேரத்திலும் நீங்கள் பைரோடன் தீவுக்கு செல்லலாம்.