தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரடிகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுதந்திரகுமார் (43), தென்காசி மாவட்ட எல்லையில் உள்ள ஆலங்குளம் – பழங்கோட்டை சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட சுதந்திரகுமார், ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விடுப்பு எடுத்து தனது பெற்றோருடன் கரடிகுளத்தில் வசித்து வந்தார். கடந்த முன்தினம் மாலை, அவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். சாலையோரம் கிடந்த அவரது சடலத்தை குருவிகுளம் போலீசார் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மது பாட்டில்கள் மீட்கப்பட்டதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
ஆசிரியர் சுதந்திரகுமாரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், கடைசியாக அவர் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள ஆவுடையம்மாள்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (28) மற்றும் ஒரு 17 வயது சிறுவனுடன் பேசியது தெரிய வந்தது.
அவர்களைப் பிடித்து விசாரித்ததில், கொலைக்கான அதிர்ச்சி தகவல் வெளியானது. ஓரினச்சேர்க்கைக்கான செயலி மூலம் சுதந்திரகுமாருக்கும், அஜித்குமார் மற்றும் சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாலை, கரடிகுளத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள காமாட்சிபுரம் கண்மாய் பகுதியில் மூவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், அஜித்குமாரும், சிறுவனும் சேர்ந்து சுதந்திரகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
கொலையாளிகள் இருவரும் பதற்றத்தில் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுச் சென்றதாலும், செல்போன் உரையாடலை வைத்தும் போலீசார் அவர்களை விரைந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜித்குமார், சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.
அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் ஒரு வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
