தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு கே கே செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு அறிவித்துள்ளபடி மருந்து கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு சில இளைஞர்கள் ஆன்லைனில் மருந்துகள் வாங்கி அதை தீய வழிகளில் பயன்படுத்துகிறார்கள்.

போலியான மருத்துவர் சீட்டை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து மருந்துகள் வாங்குகிறார்கள். எனவே மத்திய அரசு ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 15-ஆம் தேதி அனைத்து தாலுகாவிலும் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும். மேலும் இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில் மார்ச் இறுதி வாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 42,000 மருந்து வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.