பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் நீல் சாம்ராஜ் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். தனது அசாத்திய திறமையால் ஒரே நாளில் இரண்டு முறை தேசிய சாதனையை முறியடித்து அவர் தங்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கிய நீல் சாம்ராஜ், 10.53 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய யு-18 (U-18) தேசிய சாதனையை முதன்முறையாக நிகழ்த்தினார். இவரது இந்த மின்னல் வேக ஓட்டம் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், அரையிறுதியில் தானே படைத்த முந்தைய சாதனையை மேலும் மேம்படுத்தினார். இதில் 10.46 வினாடிகளிலேயே இலக்கை எட்டி முதலிடம் பிடித்து, மீண்டும் ஒரு புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்தார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை தேசிய சாதனையைத் தகர்த்தெறிந்த நீல் சாம்ராஜ், இப்போட்டியில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்குப் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றித் தந்துள்ளார். மிகக் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து அவர் படைத்த இந்த சாதனை வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள இளம் புயல் நீல் சாம்ராஜின் இந்த மகத்தான சாதனைக்கு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
