ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள நேரடி மோதலில், உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதி முக்கியக் களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் 40 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கச் செய்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ தகவல்படி, கடந்த செவ்வாயன்று ஈரானின் தீவிரத் தாக்குதல்களையும் மீறி இக்கப்பல்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாகக் கடத்தப்பட்ட அந்த வணிகக் கப்பல்களில் மொத்தம் 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து கப்பல்களைப் பாதுகாக்க அமெரிக்க வான்படை, கடற்படை மற்றும் விண்வெளிச் செயற்கைக்கோள் தரவுகள் ஒருங்கிணைத்து பயன்படுத்தப்பட்டன.
கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல உதவிய அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. மேலும், ஈரான் துறைமுகங்களின் செயல்பாடுகளை முழுமையாக முடக்கும் வகையில் கடற்படை முற்றுகையையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த மோதல்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு தினமும் 20 மில்லியன் பேரல் எண்ணெய் ஏற்றுமதியாளரான இப்பகுதியில், தற்போது வரத்துக் குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அதன் ஆதரவு வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. பஹ்ரைன் வான்பரப்பில் ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளதாக பஹ்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரான் நிலைகள் மீதான தாக்குதல்கள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அத்துடன், அந்த ஜலசந்திக்குச் சொந்தம் கொண்டாடும் வகையில் அதன் பெயரை மாற்றுவது குறித்தும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹார்முஸ் ஜலசந்தி அருகே இருந்த ஈரான் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலே இந்தப் பதற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி அமெரிக்கா முன்கூட்டியே இந்தத் தாக்குதலைத் தொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அப்பகுதி வழியே செல்லும் அமெரிக்க ஆதரவு நாடுகளின் வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது.
தற்போது ஒரே நாளில் 40 கப்பல்களை அமெரிக்கா வெற்றிகரமாகப் பாதுகாத்திருந்தாலும், வரும் நாட்களில் ஹார்முஸ் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
