அமெரிக்காவில் பல் சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், பல் வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது ஒரு பல்லை அகற்றுவதற்காக 2,500 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.37 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பல் மருத்துவக் காப்பீடு இருந்தபோதிலும் இவ்வளவு பெரிய தொகையை சொந்தமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அமெரிக்காவில் மருத்துவச் செலவு எந்த அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை தனது காணொலி மூலம் பகிர்ந்துள்ளார்.
மருத்துவமனைக்குச் சென்றபோது பல் பரிசோதனைக்கான கதிர்வீச்சுப் படத்திற்காக மட்டும் 180 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரத்துக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக நிதின் தெரிவித்துள்ளார். காப்பீட்டு நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் கழிவுகள் இருந்தபோதிலும், இறுதியாக தன்னுடைய பங்காக ரூ.2.37 லட்சம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கு மாறாக இந்தியாவில் பல் அகற்றுதல், பல் சுத்தம் செய்தல், வேர் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் மருத்துவச் செலவு தொடர்பான விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக பல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவது சிலருக்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கலாம் என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.
View this post on Instagram
இதுகுறித்து நிதின் தனது காணொலியில் கூறுகையில், அமெரிக்காவில் பல் சிகிச்சைக்காக செலவிடும் தொகையைவிட இந்தியாவுக்குச் சென்று திரும்புவதற்கான விமானக் கட்டணம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒரு பல்லை அகற்றுவதற்கே ரூ.2.37 லட்சம் செலவிடுவதற்குப் பதிலாக, அந்தப் பணத்தில் இந்தியாவுக்குச் சென்று பல் சிகிச்சையை முடித்துக்கொண்டு, குடும்பத்தினரையும் சந்தித்து மீண்டும் அமெரிக்கா திரும்பலாம் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சென்று வருவதற்கான விமானக் கட்டணம் சுமார் 1,200 டாலர்கள், அதாவது ரூ.1.14 லட்சம் அளவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மருத்துவச் செலவு மற்றும் சிகிச்சை வசதிகளை ஒப்பிட்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதின் பகிர்ந்த இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவச் செலவுகளை ஒப்பிட்டு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர், பல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அதிக தொகை செலவிடுவதற்குப் பதிலாக இந்தியாவில் சிகிச்சை பெறுவது சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், விமானக் கட்டணத்துடன் இந்தியாவில் சிகிச்சையையும் முடித்துக்கொள்ளலாம் என நகைச்சுவையாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், பல் சிகிச்சைக்கான கட்டணம் மருத்துவமனை, சிகிச்சையின் தன்மை, காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் குறித்த இந்த இந்திய வம்சாவளியினரின் அனுபவம் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
