சீனாவின் ஹுனான் மாகாணத்தில், உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவ முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியாவ் ஐஹுவா என்ற பெண் மக்ஜாங் விளையாட்டு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வழக்கமாக வரும் 60 வயது முதியவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட சியாவ், உடனடியாக அவருக்கு உதவி செய்ய ஓடிச் சென்றுள்ளார். முதியவருக்கு வெப்பம் அல்லது வெயில் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து, அவரை காற்றோட்டமான இடத்துக்கு அழைத்துச் செல்லவும் அவர் முயன்றுள்ளார்.
முதியவரின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்த சியாவ், பதற்றத்தின் காரணமாக உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்த ஒருவர் அவசர ஊர்தியை அழைத்த நிலையில், முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிருடன் இருந்ததாகவும், பின்னர் சிகிச்சையின்போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதியவரின் குடும்பத்தினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, சியாவ் சரியான முறையில் முதலுதவி அளிக்கவில்லை என்றும், அவரது செயல்பாடுகளே உயிரிழப்புக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் உயிரைக் காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கே எதிர்பாராத பிரச்னை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதியவரின் குடும்பத்தினர் சியாவிடம் பெரும் தொகையை இழப்பீடாகக் கோரியதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.14 லட்சத்துக்கும் அதிகமான தொகையை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் முதியவரின் உடலை அவரது கடைக்கு வெளியே வைத்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சியாவும் அவரது கணவரும், இறுதியில் 19,000 யுவான், இந்திய மதிப்பில் ரூ.2.68 லட்சத்துக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளனர். பணம் கொடுத்த பிறகும் இந்த சம்பவம் சியாவை கடுமையாக பாதித்ததாகவும், மன அழுத்தத்தால் அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தனது நிலையை விளக்கி அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவ முயன்றவரையே இவ்வாறு இழப்பீடு வழங்க வற்புறுத்தினால், எதிர்காலத்தில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ யாரும் முன்வர மாட்டார்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த விவகாரத்தை மீண்டும் விசாரித்தனர். முதியவரின் உயிரிழப்பு இயற்கையான முறையில் ஏற்பட்டதாகவும், சியாவ் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சீனாவின் ‘நல்லெண்ண உதவியாளர்’ சட்டப் பாதுகாப்பு விதிகளின்படி, நல்ல நோக்கத்துடன் மற்றொருவருக்கு உதவ முயற்சிப்பவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இருப்பதாக அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து முதியவரின் குடும்பத்தினர் சியாவிடம் பெற்ற ரூ.2.68 லட்சத்துக்கும் அதிகமான தொகையை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
